பாவிகளின் ஜெபம்

ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்?

பிலிப்பியச் சிறைச்சாலைக்காரனின் இந்தக் கேள்விக்குப் பவுல் அப்போஸ்தலர் கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் எனப் பதிலளித்தார். இரட்சிப்பைப் பெறுவதற்குமுன் அதன் முக்கியத்துவத்தைப்பற்றி  சற்று அறிந்துகொள்வது மிகவும் அவசியமானது.  நாம் அறியவேண்டிய ஒரு மிகப்பெரிய உண்மை என்னவென்றால், கிறிஸ்துவே ஆதாரம்; கிறிஸ்துவின் சிலுவையே அதனைப் பெற்றுக்கொள்ளும் ஒரேவழி.  இந்தக் கோட்பாடு ஒருபொழுதும் மாறுவதற்கில்லை; இப்படியிருக்க, நண்பரே, நீர் மரித்து, எரிநரகத்திற்குள் தள்ளப்பட்டால் யார் கவலைப்படுவார்கள்?

  • தேவாதி தேவன் கவலைப்படுகிறார் – யோவா. 3:16
  • உமக்காக மரித்த இயேசுகிறிஸ்து வேதனையடைகிறார் – மத் 18:11
  • பரலோகத்திலிருக்கும் ஒவ்வொருவரும் கவலைப்படுகிறார்கள் – லூக். 15:7
  • அந்தப் பாவத்திலிருந்து விடுதலையடைந்தோர் {இரட்சிக்கப்பட்டோர்} யாவரும் வேதனைப்படுகிறார்கள் – வெளி. 22:17
  • நரகத்தில் வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கானோர் கவலைப்படுகிறார்கள் – லூக். 16:19-31
  • உமக்காக நாங்களும் வேதனைப்படுகிறோம் – ரோம. 1:16

இதுபற்றி நீர் கவலைப்படுவதில்லையா? மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்னமனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? {மத். 16:26} என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சொல்கிறார்.

பரலோகத்திற்குச் செல்வதற்கு பலவழிகள் உண்டென மனுஷன் தன்னைத்தானே ஏமாற்றுகிறான்; எல்லா ஆறுகளும் ஒரே சமுத்திரத்திலேயே விழுகிறதென வஞ்சிக்கப்படுகிறான்!!  மனுஷன் தானும் வஞ்சிக்கப்பட்டு, மற்றவர்களையும் வஞ்சிக்கிறான்.  ஏதேன் தோட்டத்தில் ஆரம்பமான வஞ்சனை, இன்றும் தொடர்கிறது; ஆனால், இயேசுவே இரட்சிப்பின்   திறவுகோலை  உடையவர்  என்பதனையும், அவரே இரட்சிப்பு என்பதனையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியிருக்கிறது.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம்  இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும்மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை {அப். 4:12} என்று வேதாகமம் சொல்கிறது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மேலும் இதுபற்றி முழுமனுஷகுலத்திற்கும் நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என யோவா. 14:6ல் எச்சரித்திருக்கிறார்.

நண்பரே, நீர் இன்னும் தாமதிப்பதென்ன? உம்முடைய மரணத்தின் காலத்தை நீர் அறிவீரோ? இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் {II கொரி. 6:2}.

தேவனுடைய இரக்கத்தையும், அவருடைய கிருபையையும் இப்பொழுதே பெற்றுக்கொள்வீராக.  கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை உம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதொன்றே நீர் பரலோகத்திற்குப் போவதற்குத் தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரேவழியாகும்; வேறெந்த வழியும் இல்லை.  இதோ, பின்வரும் விசுவாசப் பிரகடனத்தை உம்முடைய வாயினால் அறிக்கையிட்டு, உம்முடைய இருதயத்தில் அதனை மனப்பூர்வமாக விசுவாசிப்பீராகில், இந்தக் கணமே இரட்சிக்கப்படுவீர்.  நம்மோடு சேர்ந்து பின்வரும் ஜெபத்தை உம்முடைய வாயினால் அறிக்கையிடுவீராக.

பரலோகத்தின் பிதாவே!

பாவியாகிய நான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் உம்மிடத்தில் வருகிறேன்.  நான் உமக்கெதிராகப் பாவஞ்செய்து, தவறான பாதைகளினூடாகப் பிரயாணஞ்செய்கிறேன் என்பதனை உணருகிறேன்.  என் பாவத்தை மன்னித்து, உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் என் அநீதிகளையும், அக்கிரமங்களையும் கழுவிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இதோ, என் வாயினால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்றும், அவர் இன்றும் என்றும் ஜீவிக்கிறாரென்றும் விசுவாசிக்கிறேன்.  அவரை என் சொந்த இரட்சகராகவும், என் கர்த்தராகவும் இப்பொழுதே நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.  ஆனபடியினால், இப்பொழுதே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலும், தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டேன், பரிசுத்தமாக்கப்பட்டேன், நீதிமானாக்கப்பட்டேன், இரட்சிக்கப்பட்டேன் என்று உறுதியாக விசுவாசிக்கிறேன்.  இதற்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.      ஆமென்.

இந்தப் பாவிகளின் ஜெபத்தை முழுமனதோடும், முழுஇருதயத்தோடும் மனப்பூர்வமாக அறிக்கையிட்டீரானால், நிச்சயமாக நீர் இரட்சிக்கப்பட்டு, மறுபிறப்பைப் பெற்றுக்கொண்டீர் என விசுவாசிப்பீராக.  தொடர்ந்து இந்த மகா பரிசுத்தமான கிறிஸ்தவ வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு ஏதுவாக நம்மால் பிரத்தியேகமாகத் தயார்செய்யப்பட்ட ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்ற புஸ்தகத்தை இலவசமாக நம்மிடத்தில் பெற்றுக்கொள்ளவும். உம்முடைய ஜெயங்கொண்ட கிறிஸ்தவ வாழ்க்கைக்கு நம்முடைய மனப்பூர்வமான வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்கிறோம்.   கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக!

இரட்சிப்பின் செய்தி